இந்த நாள் வைகை ஆற்றின் பிறப்பிடமான மேகமலை வனப்பகுதியில் கடும் வறட்சி

தேனி, ஜூன் 18: ஒரு கோடி மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றின் பிறப்பிடமான மேகமலையில் வசிக்கும் வனவிலங்குகள் குடிநீரின்றி தவித்து வருகின்றன. இவைகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வனத்துறையினர் 25 இடங்களில் சிமெண்ட் தொட்டிகள் கட்டி டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் 62 ஆயிரத்து 677.55 ஹெக்டேர் (ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 694 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. வைகையின் பிறப்பிடமான மூலவைகை இங்கு தான் உள்ளது.
இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில்் வசிக்கும் அத்தனை வனவிலங்குகளும் வசிக்கும் சிறப்பான அடர்ந்த வனப்பகுதியாக மேகமலை இருந்து வருகிறது. பருவநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு, மரம் கடத்தல் போன்ற பாதிப்புகளால் மேகமலை தனது வளத்தை மெல்ல இழந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்றில் ஆண்டுக்கு 270 நாள் தண்ணீர் செல்லும். இதன் அளவு படிப்படியாக குறைந்து கடந்த 2017ம் ஆண்டு 27 நாட்கள் மட்டுமே நீர் சென்றது. 2018ம் ஆண்டு ஏழு நாள் மட்டுமே வைகையில் நீர் வரத்து இருந்தது. 2019ம் ஆண்டு இதுவரை ஒரு நாள் கூட தண்ணீர் வரவில்லை.

வைகை குடிநீரை நம்பி தென் மாவட்டங்களில் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். பல லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேகமலை அழிவின் விழிம்பில் உள்ளது. இவ்வளவு பரப்பு கொண்ட மேகமலையில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொட்டி கட்டி அருகிலேயே போர்வெல் அமைத்திருந்தனர். வனஊழியர்கள் அடிகுழாயினை அடித்து அந்த தொட்டியை நிரப்புவார்கள். வனவிலங்குகள் அந்த நீரை குடிக்கும். தற்போது மேகமலையில் போடப்பட்ட போர்வெல்கள் கடும் வறட்சியால் வறண்டு விட்டன. இங்கு வசிக்கும் வனவிலங்குகளை பாதுகாக்க வேறு வழியின்றி வனவிலங்குகள் குடிநீருக்கு வரும் 25 முக்கியமான இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு சிமெண்ட் தொட்டிகளை வனத்துறை கட்டி உள்ளது. ஊருக்குள் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று இந்த தொட்டிகளை நிரப்புகின்றனர். ஒரு கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமான மேகமலையில் வசிக்கும் வனவிலங்குகளை பாதுகாக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் அளவுக்கு மிகவும் மோசமான பருவநிலை நிலவுகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: மேகமலையில் 13 ஆயிரம் ஏக்கர் வரை நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலங்களை மீட்டால் தான் முழு வனத்தையும் பாதுகாக்க முடியும். வனத்தை பாதுகாக்க முடியாவிட்டால், வைகையும் காணாமல் போய் விடும்.

ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் வழங்குவதிலும் பெரும் பிரச்னை வந்து விடும். மேகமலை வனத்தை பாதுகாக்காவிட்டால் தென்மாவட்டங்கள் முழுக்க பாலைவனமாகி விடும். எனவே, வனவளத்தை பாதுகாக்க தற்போது 70 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதாது. குறைந்தபட்சம் 300 பேராவது தேவைப்படுகின்றனர். தவிர ஆக்கிரமிப்பில் உள்ள வனநிலங்களை மீட்க வேண்டும். அரசியல் தலையீடு எதுவும் இருக்க கூடாது. தற்போது இங்குள்ள வனவிலங்குகள் குடிநீரின்றி இறந்து விடக்கூடாது என்பதில் பெரும் அக்கறை காட்டி வருகிறோம். இதற்காக 25 இடங்களில் சிமெண்ட் தொட்டிகளை கட்டி விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று நிரப்பி வருகிறோம். இதற்கும் நிதி போதவில்லை. வனஆர்வலர்கள் வனவிலங்குகளின் குடிநீருக்கு நிதி வழங்க முன்வந்தால் நல்லது. அப்படி நிதி வழங்குபவர்கள் தேனியில் உள்ள வார்டன் அலுவலக எண்: 04546-250276 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

Tags : drought ,forest ,Vaigai ,
× RELATED வறட்சிக்கால கால்நடை பராமரிப்பு பயிற்சி முகாம்