×

கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 18: சிவகங்கை நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. 11 ஆண்டுகளாகியும் திட்டம் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன. சில இடங்களில் 10அடி அகலம் வரையில் இருந்த இக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் தற்போது மிகச்சிறிய அளவிலான கால்வாய்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர், மழை நீர் சென்று வந்த கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு போயுள்ளதால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் செல்ல வழியில்லை.

சிபி காலனி, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள், திரவுபதி அம்மன் கோவில் தெரு, மரக்கடை வீதி, தெப்பக்குளம் அருகே, பெருமாள் கோவில் அருகே கழிவு நீர் குளமாக காட்சியளிக்கிறது. இக்கால்வாய்களில் அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகளும் தேங்குவதால் கழிவு நீர் முற்றிலும் செல்ல முடியாத நிலையில் உள்ளன. அவ்வப்போது கழிவு நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகள் மட்டும் எடுக்கப்படுகின்றன. ஆனால் முழுமையாக தூர்வாரப்படாததால் சிறிய மழை பெய்தாலே மழை நீரும், கரிவு நீரும் சாலைகளில் செல்கின்றன.
பொதுமக்கள் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்ட குளறுபடியால் கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலையில் லேசான மழை பெய்தாலே சாலைகளில் மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து செல்கிறது. பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.

நீர் வடிந்த பின்பு கழிவுகள் கடைகள் முன்பும், சாலைகளிலும் தேங்கி நிற்கின்றன. கால்வாய்கள் தூர்வாரும் போது கால்வாய்களில் அடி வரை தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகளை முழுமையாக அகற்றவில்லை. சில அடி ஆழம் மட்டுமே தூர்வாரப்படுகிறது. கால்வாய்களை ஒரே நேரத்தில் முழுமையாக தூர்வாராமல் எப்போது பிரச்சினை ஏற்படுகிறதோ அப்போது வந்து பெயரளவிற்கு தூர் வாருகின்றனர். முழுமையாக கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...