குடியிருப்பு வீடுகளை சுற்றி கருவேலமர கட்டுக்குள் குளம்போல் தேங்கிய கழிவுநீர்

சாயல்குடி, ஜூன் 18:கருங்குளம் இந்திராநகர் குடியிருப்பு வீடுகளை சுற்றி சீமை கருவேலமரக்காட்டிற்குள் கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது.கடலாடி கருங்குளம் ஊராட்சி, இந்திராநகர் குடியிருப்பில் சுமார் 150 வீடுகள் உள்ளன, இதன் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், தேவாலயம், சந்தனமாரியம்மன் கோயில் மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தெருத்தண்ணீர் வெளியேற வரத்துகால்வாய் இன்றி, பெருக்கெடுத்து ஓடி கழிவுநீர் இக்குடியிருப்பு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் சாயல்குடி-முதுகுளத்தூர் சாலையோரம் உள்ள பழைய எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் மாதக்கணக்கில் பெருக்கெடுத்து ஓடி சங்கமித்து கிடக்கிறது.

இதனால் பாசி பிடித்து தண்ணீர் சாக்கடையாக மாறி குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பன்றிகள் கும்மாளமிட்டு கலக்கி கொண்டிருப்பதால், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் பெரும் துயரை சந்தித்து வருவதாகவும், அதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு போன்ற விஷகாய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். தெருக்குழாய் அருகே நீர் உறிஞ்சு தொட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : housing residences ,houses ,
× RELATED 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறவில்லை...