×

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 18: கொல்கத்தாவில் அரசு டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், பயிற்சி மருத்துவர்கள் சங்கம், இளநிலை மாணவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இவர்கள் தேசிய மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரக்கோரி கோஷமிட்டனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் கூறுகையில், ``கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய அளவிலான மருத்துவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைமை முடிவு செய்யும்’’ என்றார். மதுரையில், அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த தர்ணாவில், அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை டாக்டர் ரவீந்திரன் கூறுகைளில், ``அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் புறக்கணிக்கப்பட வில்லை. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓபி நேரம் முடிந்தும். தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முடிவு செய்யும்’’ என்றார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் தெரிவிக்கையில், “மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பரிசோதனை கூடம் மற்றும் விரும்பி மேற்கொள்ளப்படுகிற அறுவை சிகிச்சைகள் உட்பட, அத்தியாவசியமற்ற அனைத்து சேவை பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், விபத்து மற்றும் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல செயல்பட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, தங்களது உயிர்பாதுகாப்பு குறித்த அச்சம் மருத்துவர்களுக்கு இருந்தால், அவர்களால் எப்படி திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். எனவே மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, வலுவான தேசிய அளவிலான சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.


Tags : Government doctors ,incident ,Kolkata ,
× RELATED காஷ்மீரில் விநோத சம்பவம் எஜமானரை...