×

படிப்படியாக வரத்து குறைவு முடிவுக்கு வருது மாங்காய் சீசன்

திண்டுக்கல், ஜூன் 18: திண்டுக்கல் மாவட்டத்தில் நீடித்து வந்த மாங்காய் சீசன் தற்போது முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பரளி, வேம்பரளி, லிங்கவாடி, காசம்பட்டி, பட்டணம்பட்டி, வளையபட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, குட்டுப்பட்டி, முளையூர், ஒத்தக்கடை, கோபால்பட்டி, வலசு, ராமராஜபுரம், அஞ்சுகுழிப்பட்டி, மலைப்பட்டி, கொரசின்னம்பட்டி, அய்யாப்பட்டி, மருநூத்து, வி.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலத்திற்கு அடுத்தபடியாக நத்தம் பகுதியில் மாங்காய் அதிகம் விளைகிறது. கல்லாமை, காசாலட்டு, பங்கனபள்ளி, செந்தூரம் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. மார்ச் கடைசி வாரம் துவங்கும் சீசன், ஜூன் இறுதிவரை நீடிக்கும். இங்கிருந்து மதுரை, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு மாங்காய் அனுப்பப்படுகிறது. உள்ளூர் பகுதியில் உள்ள தனியார் மாம்பழ கூழ் தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர்.

துவக்கம் முதல் முறையே செந்தூரம், பங்கனபள்ளி, காலாபாடி, இமாம்பசந்த், கல்லாமை, காசாலட்டு என படிப்படியாக குறிப்பிட்ட இடைவெளியில் மாங்காய் வரத்து இருக்கும். தற்போது கல்லாமை மற்றும் காசா ரகங்கள் வருகின்றன. அடுத்த 15 நாட்களில் சீசன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிக வரத்துள்ள காசா ரகத்தை பொறுத்து, கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது கடந்தாண்டை விட கூடுதல் என்ற போதும், விளைச்சல் குறைவு என்பதால், பெரிய அளவில் லாபம் இருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : dropout ,season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு