×

குறைதீர் கூட்டம் நடத்துவதில் தாமதம் மாற்றுத்திறனாளிகள் போராட முடிவு

பழநி, ஜூன் 18: குறைதீர் கூட்டம் நடத்த தாமதப்படுத்துவதைக் கண்டித்து பழநியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை சப்.கலெக்டர் அளவில் மாதம் ஒருமுறையும், மாவட்ட கலெக்டர் அளவில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி கூட்டம் நடத்தப்படவில்லை. தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு மேலாகியும் கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதனால் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் வரும் 24ம் தேதி சப்.கலெக்டர் முன்பும், 25ம் தேதி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் கூறுகையில், கூட்டம் நடைபெறும் இடம் போன்றவற்றை ஊடகங்களில் 10 நாட்களுக்கு முன்னரே வெளியிட வேண்டும். மனுக்களை அளிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். பெறப்பட்ட மனுக்களின் ஏற்பு மற்றும் நிராகரிப்பு விபரங்களை எழுத்துப்பூர்வமாக 1 மாத காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மனுக்களின் நிலை குறித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதுவரை கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.Tags : house ,meeting ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்;...