×

ஆத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு?

செம்பட்டி, ஜூன் 18: ஆத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில், ஆத்தூர், அக்கரைப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, வக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம், சீவல்சரகு, மணலூர், சித்தரேவு, போடிக்காமன்வாடி, கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆலமரத்துப்பட்டி உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டமான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடு நடப்பதாக முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் புகார் செய்தவண்ணம் இருந்தனர். இதுகுறித்து ஆத்தூர் யூனியன் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவதாக புகார் கூறப்பட்டது.இந்நிலையில், ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டமான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை ஆய்வு செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

 இதுதவிர ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்வதோடு, இதன் அறிக்கைகளை 18.06.2019 அன்று ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி பாளையங்கோட்டை ஊராட்சியில் உதவி திட்ட அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். போடிக்காமன்வாடியில் உதவி செயற்பொறியாளர் தலைமையிலும், முன்னிலைக்கோட்டையில் உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு- 2) தலைமையிலும், பிள்ளையார்நத்தம் ஊராட்சி பகுதியில் உதவி இயக்குனர் கங்காதரணி (தணிக்கை) தலைமையிலும், பித்தளைப்பட்டி ஊராட்சியில் உதவி செயற்பொறியாளர் தலைமையிலும், அக்கரைப்பட்டியில் உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு -1), ஆத்தூரில் உதவி செயற்பொறியாளர் தலைமையிலும் அதிகாரிகள் 22 ஊராட்சியிலும் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினர்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சி பகுதியில் உதவி இயக்குனர் கங்காதரணி பயனாளிகளின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததோடு, மரம் நடுவதற்காக குழிகள் தோண்டியவர்களிடம் நாள் ஒன்றுக்கு எத்தனை குழிகள் தோண்டுவீர்கள் என கேள்வி கேட்டார். மேலும் முறையாக பணி மேற்பார்வையாளர்கள் வருகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பயனாளிகளின் பதிலை குறித்துக்கொண்டு மரம் நடுவதற்கு தேவையில்லாத ஆழம் தோண்டக்கூடாது என அறிவுறுத்தினார்.மாற்றுத்திறனாளிகள் தினசரி பணிகளுக்கு வருகிறார்களா? அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் குறித்து ஊராட்சி செயலர்களிடம் விசாரணை செய்தனர். ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி மற்றும் திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.

Tags : Attur Union ,
× RELATED ஆத்தூர் சீவல்சரகுவில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்