முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜூன் 18:  தர்மபுரியில், முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ₹50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். நடப்பாண்டிற்கான விருது, எதிர்வரும் வரும் ஆகஸ்டு 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.4.2018 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அல்லது 31.3.2019 அன்று 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-19) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு, குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரார்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். தகுதியுள்ளவர்களிடமிருந்து விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பங்களை ஜூலை 2ம் தேதி, மாலை 5 மணி வரை அனுப்பலாம். மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,
× RELATED மதுரை பொறியாளருக்கு முதல்வர் வாழ்த்து