×

கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் போராட்டம்

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் 450 தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தனர். அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.ேமற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, நேற்று தர்மபுரி மாவட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்கில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று(18ம் தேதி) காலை 6 மணிவரை இந்த புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உள்நோயாளிகளுக்கு மருத்துவமனைக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவர் சங்கம் சார்பில், மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம்போல் செயல்பட்டது. இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கத்தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 150 தனியார் மருத்துவமனைகளும், 300 கிளினிக்குகளும் உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதிற்கு ஆதரவாக, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்டோர் மாவட்டத்தில் ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்,’ என்றார்.


Tags : Government doctors ,
× RELATED மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி...