×

கடலூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கடலூர், ஜூன் 18: கடலூரில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போதிலும் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். மருத்துவமனை சூறையாடப்பட்து. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் கடந்த 11ம் தேதி முதல் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு மருத்துவர்கள் மட்டும் கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் சிகிச்சை தவிர வேறு எந்தபணிகளிலும் மருத்துவர்கள் ஈடுபடவில்லை.

இதுதொடர்பாக கடலூர் இந்திய மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் கேசவன், தலைவர் டாக்டர் கோவிந்தராஜன், பொருளாளர் முகுந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில்,மக்களின் உயிர் காக்க நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறோம். மருத்துவர்களாக பணியாற்றும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். கொல்கத்தா சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இந்திய மருத்துவர் சங்கம் கூடி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மருத்துவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்ட தனியார் மருத்துவமனைகளில் புறசிகிச்சை அளிக்கப்படாததால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்ததால் கூட்டம் அதிகரித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Doctors ,Cuddalore district ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்