×

நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து கோயில் கட்ட எதிர்ப்பு

கடலூர், ஜூன் 18: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கம்போல ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட சோதனையில் இளைஞர் ஒருவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வேப்பூர் வட்டம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன்(28) எனவும், உயிருக்கு பயந்து கீழ் திருப்பதியில் ஒரு ஓட்டலில் பணியாற்றியபடி தலைமறைவாக இருந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் சாத்தியம் கிராமத்தில் நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டார். மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: எங்கள் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள சின்னஏரி உள்ளது. அதன் மூலம் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதில் என் நிலமும் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் முக்கிய நீர் வரத்து வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டுகின்றனர். இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.பொதுநலன் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் மனுக்கள் அளித்து வரும் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.
என் கோரிக்கையை ஏற்று நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags : temple building ,
× RELATED கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க...