பணிநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலரை மீண்டும் நியமிக்க எதிர்ப்பு

கடலூர், ஜூன் 18: கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அரிசி பெரியாகுப்பம், குமாரபேட்டை, கன்னிமாநகர், எம்.புதூர், மாவடிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சியில் முன்பு ஊராட்சி செயலாளராக 20 ஆண்டுகள் பணியாற்றிய நபர் பல்வேறு ஊழல் முறைகேடுகள்  தொடர்பாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணையோடு வேறு ஒரு பஞ்சாயத்திற்கு பணி நியமனம் பெற்று அங்கு பணியாற்றி வருகிறார்.தற்போது மீண்டும் அவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தர செயலாளராக வருவேன் என்று கூறி வருகிறார். ஏற்கனவே அவரால் பல்வேறு வகைகளில் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மீண்டும் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு செயலராக அவரை நியமிக்க கூடாது. அவர் மீது துறை வாரியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

× RELATED விரைவில் அமைக்க வலியுறுத்தல்...