சிதம்பரம் 4வது வார்டில் உப்பு நீராக மாறிய குடிதண்ணீர்

சிதம்பரம், ஜூன் 18: சிதம்பரம் 4வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக மாறியுள்ளதால் பொதுமக்கள் அதனை குடிக்க முடியாமல் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் 4வது வார்டு பகுதியில் அம்பேத்கர் நகர், வாழைத்தோப்பு, மீனவர் காலனி, முத்து மாணிக்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த தெரு மக்களுக்கு வடக்கு மெயின் ரோடு மீன் மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஆழ்துளை கிணறு மூலம் வழங்கப்படும் குடிநீர் முற்றிலும் உப்பு நீராக மாறியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் உபயோகப்படுத்த முடியாமல் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சாதாராண ஏழை, எளிய மக்கள் பணம் செலவு செய்து மினரல் வாட்டர் கேன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் மினரல் வாட்டர் கேன் வாங்க முடியாதவர்கள் தொலை தூரத்தில் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் தினம் தினம் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் சிதம்பரம் நகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அங்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நல்ல தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், அதுவரையில் நகராட்சி குடிநீர் டேங்கர் லாரி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chidambaram ,
× RELATED ஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ஒலி ப.சிதம்பரம் எச்சரிக்கை