×

கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கோலப்பொடி கம்பெனிகளை மூட வேண்டும்

கரூர், ஜூன் 18: கோலப்பொடி மாவு அரவை கம்பெனிகளை மூட வேண்டும் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கடவூர் தாலுகாவை சேர்ந்த 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கடவூர் தாலுகா ஆதனூர், செம்பியநத்தம், தேவர்மலை கிராம மக்கள் அளித்த மனு:ஊருக்கு மேற்கே கெமிக்கல் மில் கோலப்பொடி மாவு அரவை கம்பெனிகள் செயல்படுகின்றன. இதனால் காற்று மாசுபட்டு நிலத்தில் வெந்நிறம் படிந்து பாலைவனமாக காட்சியளிக்கிறது. சுவாச கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுகிறது. குடிநீர் மாசுபட்டு விவசாயம், கால்நடைகளுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதிக சத்தத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெளிமாநிலத்தவர் தங்கி பணி புரிவதால் பிரச்னைகள் ஏற்படுகிறது. கிராம சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. எனவே இவற்றை உடனே நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாம் தமிழர் கட்சி செயலாளர் நன்மாறன் அளித்த மனுவில், நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபைக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மே 1ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.லாலாப்பேட்டை மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அளித்த மனு:300க்கும் அதிகமான மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளனர். லாலாப்பேட்டை காவிரி ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியுடன் மாட்டு வண்டி மூலம் மணல் எடுத்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கும், எங்கள் பகுதியில் நடைபெறும் அரசு சார்ந்த கட்டுமான பணிகளுக்கும், மணல் சப்ளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் மாட்டுவண்டியில் மணல் எடுக்கக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : company ,office ,collector ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...