×

எழில்மிகு நகரம் திட்டத்துக்காக தஞ்சை நகரில் வீடு, கடைகளை இடிக்கக்கூடாது

தஞ்சை, ஜூன் 18: தஞ்சை மாநகரில் எழில்மிகு நகரம் திட்டதுக்காக வீடு, கடைகளை இடிக்கக்கூடாது என்று குறைதீர் கூட்டத்தில் அனைத்து கட்சியினர் மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரநிதிகள் மற்றும் அகழியையொட்டி வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வீடுகளை இடிக்கக்கூடாது என்று மனு அளித்தனர். அதில் தஞ்சை மாநகரில் செயல்படுத்த உள்ள எழில்மிகு நகரம் திட்டத்துக்காக தஞ்சை நகரில் வடக்கு அலங்கம், மேலஅலங்கம், செக்கடி, வடக்குவாசல், சீனிவாசபுரம், சேவப்பநாயக்கன் வாரிகளில் 50 ஆண்டுக்கும் மேலாக வசித்து மாநகராட்சிக்கு வரி செலுத்தி வரும் எங்களை அப்புறப்படுத்தவும், வீடுகளுக்கு உரிய இழப்பீடின்றி இடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழியாக சட்டத்துக்கு புறம்பான வகையில் அறிவிப்பு செய்து வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த அறிவிப்புகளை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்து வீடுகள், கடைகளை இடிக்கக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதேபோல் அமமுக பொருளாளர் ரங்கசாமி தலைமையில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், வடக்கு அலங்கம், மேல அலங்கம் மற்றும் காமராஜ் மார்க்கெட், பழைய மீன் மார்க்கெட், பழைய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பழைய கட்டுமானங்களை இடித்து விட்டு புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த உள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்களை வெளியேற்ற வாய்மொழியாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வீடுகளையும், கடைகளை நம்பியே மக்கள், வணிகர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் அந்த வணிகர்களுக்கு மீண்டும் கடைகள் வழங்குவது குறித்து எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை என்பது வணிகர்களை பாதிப்படைய வைத்துள்ளது. இதேபோல் திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள இடங்களில் அமைக்க திட்டமிடுவது மாநகர மக்களுக்கு மேலும் இடஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே எழில்மிகு நகரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஏழை மக்கள், வணிகர்களை பாதிக்காத வகையில் ஒரு புதிய மாற்று திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த உரிய பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Houses ,shops ,city ,Tanjore ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...