×

ஆலை நிர்வாகத்திடமிருந்து நிலுவைத்தொகை பெற்று தராவிட்டால் முதல்வர் வீட்டு முன் காத்திருப்பு போராட்டம்

கும்பகோணம், ஜூன் 18: கும்பகோணம் ஆர்டிஓ வீராசாமியிடம் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் கோரிக்கை மனு அளித்தார். அதில் திருஆருரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த சட்டபூர்வ விலையான ரூ.83.62 கோடியை கரும்பு அறுவடை செய்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை செலுத்தவில்லை.
மேலும் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விவசாயிகள் பெயரிலேயே அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கியுள்ளனர். இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். இதன்மூலம் விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி ரூ.350 கோடி மோசடி நடந்துள்ளது.இதுகுறித்து கடந்த ஜனவரி 8ம் தேதி, அதைதொடர்ந்து 28ம் தேதிகளில் தலைமை செயலகத்தில் ஆலை நிர்வாகத்தின் மீது மோசடி புகார் கொடுத்தோம். இந்த மோசடியை விசாரிக்க சிபிஐ மூலம் ஆணையிடுமாறு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றோம்.ஆனால் இந்த புகார் குறி்த்து அமைச்சர், 2 உயர் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்ட விவசாயி ஸ்டாலின் என்பவர், அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆலை உரிமையாளர் ராம.தியாகராஜன் மீது மோசடி புகார் செய்தார். அதன்பேரில் கடந்த மே 8ம் தேதி ராம தியாகராஜனை சென்னையில் இருந்து கடலூர் போலீசார் அழைத்து வந்தனர் ஆனால் அரசியல் தலையீட்டின் காரணமாகவும், அதிகாரவர்க்கத்தின் தலையீடு காரணமாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்திய கடன்தீர்க்க வகையற்றோர் மற்றும் நொடிப்பு நிலை வாரிய ஒழுங்கு விதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்டுள்வர்களின் விபரம் பொது அறிவிப்பு என்ற பெயரில் வெளியானது. அதில் ஆலையிடமிருந்து வர வேண்டிய பாக்கி தொகை கோருபவர்கள் அதற்கான ஆவணங்களை ஜூன் 21ம் தேதிக்குள் கோவை முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பற்றிய பொது அறிவிப்பை ஒரு விவசாயிகள் கூட பார்த்து படிக்கவில்லை. இதனால் அப்பாவி விவசாயிகள் கடனாளிகளாகும் நிலை உள்ளது.ஆலை நிர்வாகம், 11,000 விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பந்த நகல் வழங்கவில்லை. எடை பட்டியல் வழங்கவில்லை. பண பட்டுவாடா கிரய பட்டியல் தரவில்லை. இந்நிலையில் ஆலை நிர்வாகம் மோசடி செய்து எவ்வளவு கடன் பெற்றுள்ளது, எந்தெந்த வங்கிகளில் பெற்றுள்ளது என்பதற்கான ஆவணங்களை மாநில, மாவட்ட நிர்வாகம் இதுவரை முழுமையாக பெறவில்லை.எனவே கலெக்டர்களும், மாநில உயர் அலுவலர்களும் இதை சிறப்பு பணியாக கருதி போர்க்கால அடிப்படையில் செய்து விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் முதல்வர் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : plant ,house ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...