×

வெண்ணாற்றில் ஓராண்டாக மணல் கொள்ளை ஆற்றின் கரை உடைந்தால் 30 கிராமங்கள் அழியும் அபாயம்

தஞ்சை, ஜூன் 18: வெண்ணாற்றில் ஓராண்டாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் கரை உடைந்தால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு கரையோர மக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தஞ்சை பள்ளியக்ரகாரம் அருகே வெண்ணாறு கரையோர கிராமவாசிகள் அளித்த மனுவில், கூடலூர் தடுப்பணைக்கு மேற்புறம் 20 ஆழத்துக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளிலும், 30க்கும் மேற்பட்ட லாரிகளிலும் கடந்த ஓராண்டாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஆற்றில் தண்ணீர் சமயத்தில் வெண்ணாறு வடகரை உடைந்து அப்பகுதியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிந்துவிடும் நிலை உள்ளது.மேலும் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிடும் அபாயம் உள்ளது. இதை தட்டி கேட்கும் பொதுமக்கள், ஆயுதங்களை காட்டி மிரட்டப்படுகின்றனர். இதற்கு உடந்தையாக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்படுவதால் மணல் கொள்ளை தொடர்கதையாகி விட்டது. எனவே மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வல்லம் பஸ் நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும்: வல்லம் முருகையன் மற்றும் பொதுநலக்குழுவினர் அளித்த மனுவில், வல்லம் பேரூராட்சி பகுதியில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். வல்லம் பேருந்து நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வல்லம் பேருந்து நிலையத்துக்கு ஒரு சில நகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் மப்சல் பேருந்துகள், வல்லம் பேருந்து நிலையத்துக்கு வராமல் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. இதனால் திருச்சி செல்ல வேண்டிய பயணிகளும், வல்லம் வர வேண்டிய பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் புறவழி சாலையிலேயே பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவுள்ள வல்லம் பேருந்து நிலையத்துக்கு நடந்து வர வேண்டியுள்ளது. எனவே தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து பேருந்துகளையும், அதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சை வரும் அனைத்து பேருந்துகளையும் வல்லம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராசா ஏரி புறம்போக்கு நில பிரச்னையை தீர்க்க வேண்டும்: பூதலூர் தாலுகா புதுக்குடி மாதாகோயில் தெருவை சேர்ந்த பெரியநாயகம் மகன் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், புதுக்குடி அருகே உள்ள ராசா ஏரி புறம்போக்கு நிலத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இம்மக்களுக்கு தெரியாமல் 1989-90ல் புதுக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முன்னறிவிப்பு, தண்டோரா, செய்தித்தாள் விளம்பரம் என எதன் மூலமும் தகவல் தெரிவிக்காமல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்துக்கு கிரயம் செய்யப்பட்டுள்ளது.அரசு நீர்நிலை புறம்போக்குகளை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் இருக்கும் நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலையும், அரசின் கொள்கை முடிவுக்கும் எதிராக புறம்போக்கு நிலத்திலிருந்து தலித் மக்களை வெளியேற்றும் நோக்குடன் கிரயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், பூதலூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித சுமூக தீர்வும் ஏற்படாத சூழலில் தற்போது கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் என கூறிக்கொண்டு கடந்த 10ம் தேதி பொதுமக்களை ஏசியும், இளைஞர்களை சட்டையை பிடித்து இழுத்தும், மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டுள்ளனர். எனவே அத்துமீறி நடந்து கொள்ளும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி உள்ளிட்டோர் அளித்த மனுவில், 2018ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்நிலை அமைப்புகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.11.09 கோடி ஒதுக்கியது. தஞ்சை காவிரி வடிவநில கோட்டத்தில் 19 பணிகள் மேற்கொள்ள ரூ.3.17 கோடியும், வெண்ணாறு வடிநில கோட்டத்தில் 16 பணிகள் மேற்கொள்ள ரூ.2.46 கோடியும், கல்லணை கால்வாய் கோட்டத்தில் 13 பணிகள் மேற்கொள்ள ரூ.2.78 கோடியும், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்டத்தில் 11 பணிகள் மேற்கொள்ள ரூ.1.41 கோடியும் ஒதுக்கப்பட்டது. நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாருதல், மதகுகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக நடைபெறாததால் காவிரி கரைபுரண்டு ஓடியும் பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ரூ.11.09 கோடி நிதி ஒதுக்கியும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை.

எனவே இந்தாண்டு நடைபெற உள்ள குடிமராமத்து பணிகளை கண்காணித்து முறையாக செயல்படுத்த வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்துக்கு கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மேற்கண்ட அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை கொண்ட குழுவை ஏற்படுத்தி பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.சாதி மோதல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஒரத்தநாடு அருகே சமயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அளித்த மனுவில், சமயன்குடிகாடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள அம்மன் கோயில் திருவிழாவில் பல ஆண்டுகளாக முதல் மரியாதை செலுத்தி வருகிறோம். இந்தாண்டு கடந்த 6.5.2019ம் தேதி கோயில் திருவிழாவிற்கு சென்றபோது முத்துசாமி என்பவரது மகன் தென்னவன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வேற்று இனத்தினர் எங்களை வழிமறித்து சாதியை கூறி திட்டி முதல்மரியாதை செலுத்தவிடாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அதைதொடர்ந்து திட்டமிட்டு எங்களுக்குள் மோதலை உருவாக்கி ஒரு பகுதியினரை அவர்களுக்கு அடிமையாக்கி கொண்டுள்ளனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்களை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளதுடன் எங்கள் குடும்பங்களை அழித்தே தீர வேண்டும் என பக்கத்து கிராமங்களிலும் பிரச்னையை தூண்டிவிட்டு வருகின்றனர். எனவே எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இப்பகுதியில் சாதி மோதல் ஏற்படாமல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : villages ,river ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை