×

பெண்கள் பள்ளி எதிரே சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை, ஜூன்18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே செல்லும் சாலை இருபுறங்களிலும் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக இரும்பால் அமைக்கப்பட்ட வேகத்தடைகள் இருந்தன. தற்பொழுது அது பெயர்ந்து உள்ளதால் தினமும் விபத்துகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்தநிலையில் 5ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த வங்கி பணியாளர் ராஜகுமாரி என்பவர் தனது வீட்டு அருகிலேயே விபத்தில் பலியானதையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அவசரமாக அமைக்கப்பட்டது. தற்பொழுது அந்த வேகத்தடைகள் முற்றுலும் பெயர்ந்து காணாமல் போய் விட்டது.இதன் அருகே மின்சார வாரியம், டி.எஸ்.பி. அலுவலகம், காவலர்கள் குடியிருப்பு, கால்நடை மருத்துவமனை, வனத்துறை அலுவலகம், நூலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், தனியார் பள்ளிகள் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வணிக நிறுவனங்களும் உள்ளன. அதனால் இப்பகுதியில் எந்நேரமும் அதிகளவில் மக்கள் நடமாட்டமும் மாணவ, மாணவிகளின் கூட்டமும் காணப்படும். பெண்கள் பள்ளி காலை துவங்கும் நேரத்திலும் மாலை முடிவடையும் நேரத்திலும் மாணவிகள் கூட்டமாக வெளியில் வரும்போது போக்குவரத்து நெருக்கடி தினமும் ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம் இப்பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால் தினமும் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.எனவே நெடுஞ்சாலைதுறையினர் உடனடியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள சாலையில் முன்பு இருந்ததுபோல் இரு புறங்களிலும் உடனடியாக வேகத்தடைகளை அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : women ,road ,school ,Parents ,
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்