×

வலங்கைமான் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் நிதிபற்றாக்குறையால் பழுதாகி காட்சிப்பொருளான அடிபம்புகள்

வலங்கைமான், ஜூன்18: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடும்நிதி பற்றாக்குறையின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட அடிபம்புகள் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் பதவிக்காலம் முடிந்து பலமாதங்களை கடந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.இதற்கு மாறாக தற்போது தமிழகஅரசு உள்ளாட்சியின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக சிறப்பு அலுவலர்களை நியமித்துள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சிகளுக்கு தரவேண்டிய நிதி முறையாக தராமல் பெயரளவில் சொற்ப தொகையே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிராம ஊராட்சிகள் மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதி, மின்விளக்கு வசதி மற்றும் குடிதண்ணீர் வசதி ஆகியவைகளை நிறைவேற்றி தருவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மிகக்குறைந்த அளவு மின்சாரம் மற்றும் மும்முனை மின்சாரம் ஆகியவை குறைவின் காரணமாக கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் இருந்து போதுமான தண்ணீர் வழங்க இயலாத நிலை தற்போது நிலவி வருகின்றது. இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் அடிபம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிட தக்கது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில்50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இக்கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிதண்ணீர் வழங்கும் விதமாக பல்வேறு காலகட்டங்களில் பொது நிதி , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்டவைகள் மூலம் குடிநீருக்கான பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட கிரம ஊராட்சிகளில் மக்கள்தொகை அடிப்படையில் பத்தாயிரம், முப்பதாயிரம், அறுபதாயிரம் மற்றும் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட 330க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளன. அதேபோல் 600க்கும் மேற்பட்ட அடி பம்புகள் உள்ளன.மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் தற்போது இயங்கிவரும் நிலையில் மின்தட்டுப்பாடு மற்றும் மும்முனை மின்சாரம் குறைவின் காரணமாக போதிய அளவு தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற காலங்களில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பம்புகள் நூற்றுக்கும் மேலானவை பல மாதங்களாக பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை. அதற்கு முக்கிய காரணம் கிராம ஊராட்சிகளுக்கு போதிய நிதியை அரசு வழங்காதததே காரணம் ஆகும்.எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதியை வழங்கி பழுதடைந்து நிலையில் காட்சிப் பொருளாக விளங்கும் அடிபம்புகளை போர் கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Village Panchayats ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...