×

டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள்

பெரம்பலூர், ஜூன் 18: மேற்குவங்காளத்தில் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூரில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.மேற்கு வங்காள மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர் அந்த போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 140 அரசு மருத்துவர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினார்.இதில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பெரம்பலூர் தலைவர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் டாக்டர்கள் பணியை புறக்கணித்ததால் தங்களது மருத்துவமனைகளில் நேற்று காலை 6 முதல் இன்று காலை 6 மணிவரை புறநோயாளிகள் பிரிவில் செயல்படவில்லை. இதில் தனியார் மருத்துவமனை சங்க தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர்பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தனியார் மருத்துவ மனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அரியலூர்: அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து அம் மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மாநில முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணியாற்றினர்.
அரியலூர் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழக டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் குளஞ்சிநாதன் தலைமையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள 65 தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் அடையாளமாக நேற்று மூடப்பட்டிருந்தன.நேற்று ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வழக்கத்தைவிட அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகளவில் காணப்பட்டன.

Tags : Government doctors ,fighters ,
× RELATED சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு...