×

கோடை விடுமுறைக்கு பிறகு குமரி மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

நாகர்கோவில், ஜூன் 18: கோடை விடுமுறைக்கு பின்னர் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்கின. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் வகுப்புகளில் சேர சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது. இனி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதனை போன்று மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதே வேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் நேற்று தொடங்கின. இதனை தொடர்ந்து மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். சீனியர் மாணவ, மாணவியரால் ஜூனியர்கள் ராகிங் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுதலை தவிர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதனால் கல்லூரிகளில் ஜூனியர் மாணவ, மாணவியரை சீனியர் மாணவ, மாணவியர் வரவேற்கும் வகையிலான நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாகர்கோவில் கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிகளை வரவேற்று உற்சாகப்படுத்தினர். முதல் நாளில் குழப்பம் குமரி மாவட்டத்தில் ஒரு சில கலை அறிவியல் கல்லூரிகளில் 17ம் தேதி வகுப்பு தொடங்கும் என்று மாணவர் சேர்க்கையின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு வந்தனர். ஆனால் வந்த பின்னர்தான் 19ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் கல்லூரிக்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே வேளையில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று அனைத்து கல்லூரிகளிலும் செயல்பட தொடங்கின.

Tags : Opening ,science colleges ,Kumari ,summer vacation ,district ,
× RELATED கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு கலை...