×

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் சோதனை

நாகர்கோவில், ஜூன் 18:  நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக வர்த்தக நிறுவனங்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ₹24 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் தட்டு, டீ கப், தண்ணீர் பாக்கெட், கைப்பை உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெற்றன. இந்த தடை உத்தரவை தொடர்ந்து சாலையோர உணவகங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள், தட்டுகளின் பயன்பாடு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் வாழை இலை மற்றும் தாமரை இலைகளுக்கு மீண்டும் மவுசு கூடியது.

கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச்சென்றனர். ஓட்டல்களுக்கும் பாத்திரங்களை எடுத்துச்சென்று உணவு பொருட்களை வாங்கி வந்தனர். அரசின் உத்தரவை தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பயன்பாடு தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால், அபராதம், கடை உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் அதிகாரிகள் வணிக நிறுவனங்கள், கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த ஜனவரி முதல் கடைகளில் சோதனை செய்து பிளாஸ்டிக் பயன்படுத்திய வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மதவன்பிள்ளை, பகவதிபெருமாள், தியாகராஜன், ராஜா, ஜாண், சத்தியராஜ் மற்றும் ஊழியர்கள் கோட்டார் பகுதியில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர்.

மொத்தம் 30 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடைகளுக்கு 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் சோதனை நடந்து வருகிறது. இதுவரை ₹3.5 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் பிடிப்பட்டால் முதலில் 25 ஆயிரமும், 2வது முறை பிடிப்பட்டால் 50 ஆயிரமும், 3வது முறை பிடிபட்டால் 1 லட்சமும் வசூலிக்கப்படும். மேலும் 4வது முறை பிடிப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்.

இதுபோல் சூப்பர் மார்க்கெட், மால், ஜவுளிகடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால், முறையே 10 ஆயிரம், 15 ஆயிரம், 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மளிகைக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் பிளாஸ்டிக் கவ ர்கள் பய ன்படுத்தினால் முறையை 1000, 2000, 5000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் 4வது முறை பிடிபடும் பட்சத்தில் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோர கடைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். வணிக நிறுவனங்கள், கடைகளில் சோதனை மேற்கொள்ள கலெக்டரின் உத்தரவின்பேரில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை