பைக்குகள் மோதலில் ஆசிரியர் படுகாயம்

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை அருகே பைக்குகள் மோதலில் ஆசிரியர் படுகாயமடைந்தார். புதியம்புத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹெர்பர்ட் முத்துராஜ் (55).  இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (50), தூத்துக்குடி அருகேயுள்ள செம்புலிங்கபுரம் டயோசீசன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்களது மகனும், பொறியியல் பட்டதாரியும், கால்பந்து வீரருமான ஹெர்பின் (23) என்பவர், புதியம்புத்தூரில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட விஜிலா தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இதனிடையே அதே நாளில் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்ற ஹெர்பர்ட் முத்துராஜ், புதுக்கோட்டைக்கு காரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கு நிறுத்தியிருந்த தனது பைக்கை ஓட்டியபடி தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகனை பார்க்கச் சென்றார். புதுக்கோட்டை அருகே மீன்பதப்படுத்தும் ஆலை முன்பாக வந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஹெர்பர்ட் முத்துராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து புதுக்கோட்டை எஸ்ஐ அந்தோணிராஜ் வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தி வருகிறார்.

× RELATED கேரளாவில் பொதுத்தேர்வில் மோசடி...