×

பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தர மறுப்பதா? ஓட்டப்பிடாரம் யூனியனை கிராம மக்கள் முற்றுகை

ஓட்டப்பிடாரம், ஜூன் 18: பசுவந்தனை அருகே நாகம்பட்டி பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தரப்படாததால் ஆவேசமடைந்த கிராம  மக்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஓட்டப்பிடாரம் ஒன்றியம், நாகம்பட்டியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி  பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதையடுத்து ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. ஆனால், இடிக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள்  மற்றும் அதிலிருந்த மேற்கூரை கம்பிகள் உள்ளிட்டவற்றை  ஒப்பந்தக்காரர் அப்பகுதியிலிருந்து இதுவரை அகற்றவில்லை. மேலும்  புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பள்ளி வரும் குழந்தைகளில் பலர் விளையாடும்போது, அங்கு அகற்றப்படாத நிலையில் உள்ள இடிபாடுகளால் காயமடைய நேரிடுகிறது.

இதனால் ஆவேசமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நாகம்பட்டி கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கற்பகவல்லி  தலைமையில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிக் கட்டிடத்தை உடனே கட்டித்தருமாறு கோஷமிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த பிடிஓ  ராமராஜ் மற்றும் பொறியாளர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில், கட்டிட இடிபாடுகளையும் அதில்  இருக்கும் கம்பிகளையும் உடனடியாக அகற்றவும், அந்த இடத்தில் ஏற்கனவே  விடுத்த டெண்டர்படி பள்ளிக் கட்டிடம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : school ,Ottapadaram Union ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...