×

நிதி நிறுவனம் பறித்து சென்ற டிராக்டரை மீட்கக்கோரி குடும்பத்தோடு விவசாயி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி, ஜூன் 18: நிதி நிறுவனம் பறித்துச் சென்ற  டிராக்டரை மீட்டுத்தரக்கோரி  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அடுத்த சோனகன்விளை நாலாயிரமுடையார் குளத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயியான இவர், நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்தார். திடீரென தான் கொண்டுவந்திருந்த கேனில் இருந்த மண்ணென்ணெய்ய குடும்பத்தினர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனுடன் பறிமுதல் செய்து அவர்களை மீட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

கலெக்டரை சந்தித்து தர்மராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  நத்தகுளம் பாசனப்பகுதியில் எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. பருவமழை சரிவரப்பெய்யாமல் விவசாயம் பொய்த்துப் போனதால் மனம் வருந்திய எனது தந்தை இளைய பெருமாள், வயலிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நான் எங்களுக்கு சொந்தமான டிராக்டரை திருச்செந்தூரிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதற்கான மாத தவணைகளை முறையாக கட்டி வந்தேன். கடந்த மாதத்திற்கான தவணை செலுத்துவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, எங்களிடம் இருந்த டிராக்டரை நிதி நிறுவனத்தினர் பறித்து சென்றனர். இதனால் வாழ்வாதாரம் பறிபோனதால் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நிதிநிறுவனம் பறித்துச் சென்ற எங்களது டிராக்டரை மீட்டுத்தர வேண்டும். இல்லையெனில் எனது தந்தையை போல நானும் எனது குடும்பத்தினரும் கலெக்டர் அலுவலகம் முன்பாக விஷம் குடித்து அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : institution ,
× RELATED விசாகப்பட்டினம் கல்வி நிறுவனத்தில்...