×

விளாத்திகுளம் அருகே கனிமொழி எம்பி ஏற்பாட்டில் கிராமங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

விளாத்திகுளம், ஜூன் 18: விளாத்திகுளம் அருகே கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம் கிராமங்களில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ.,  ஏற்பாட்டில் லாரி மூலம்  திமுகவினர் குடிநீர் வழங்கினார். இதை வரவேற்றுள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்துனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக மகளிர் அணி செயலாளர்  கனிமொழி எம்.பி., கடந்த சில தினங்களுக்கு முன்னர் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம்  கிராம மக்கள், தங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை  மட்டுமே குறைந்த அளவே குடிநீர் வழங்கப்படுவதால் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு  தீர்வுகாண வேண்டும் என மனு அளித்தனர்.இதை ஏற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. குறிப்பிட்ட கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி நேற்று வடக்கு மாவட்ட திமுகவினர் கனிமொழி எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வல்லநாட்டில் இருந்து லாரியில் ஏற்றப்பட்ட குடிநீரை விளாத்திகுளம் 6வது வார்டுக்கு உட்பட்ட கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் விநியோகம் செய்தனர். இதை வரவேற்றுள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ துலுக்கன்குளம் கிராமத்தில் வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் தினமும் ஒரு குடம் குடிநீரை ரூ.12 கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதனால் மாத வருமானத்தில் பெரும் தொகையை குடிநீருக்காகவே செலவு செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனிடையே எங்களது கிராமத்தின் அருகே விளாத்திகுளம் கண்மாய் உள்ளது. ஆனால் கண்மாயில் நீர்நிலைகளை தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயா்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் எங்களின் கோரிக்கையை ஏற்று கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம் கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு லாாி மூலம் குடிநீர் வழங்கிய எம்பி கனிமொழி எம்.பி.க்கும், கீதாஜீவன் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்’’ என்றனர். குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் விளாத்திகுளம் மேற்கு  ஒன்றிய திமுக செயலாளர் வசந்தம் ஜெயகுமார், நகரச் செயலாளர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜன், மாணவர் அணி செயலாளர் நாராயணமூர்த்தி, வார்டு செயலாளர் தமிழரசன், பிரதிநிதி மகாராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : villages ,Vilathikulam ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை