×

பொது வார்டாக மாற்றியதற்கு எதிர்ப்பு தென்காசி நகராட்சி அலுவலகம் முற்றுகை

தென்காசி, ஜூன்18:  தென்காசி நகராட்சி 10வது வார்டு தனி வார்டை பொது வார்டாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி நகராட்சி 10வது வார்டு தனி (எஸ்.சி) வார்டாக இருந்தது. இதனை வார்டு மறுசீரமைப்பில் தற்போது 9வது வார்டாக மாற்றியுள்ளனர். மேலும் தற்போது பெண்கள் பொதுவார்டாக மாற்றி அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் நாட்டாண்மைகள் மாரிமுத்து சமுத்திரம், ராஜா தலைமையில் சுப்பிரமணியன், சந்திரன், சிம்சன், முனியாண்டி, மணி, ராஜேந்திரன், முத்துக்குமார், கருப்பையா, சந்தனமாரி, சுடலை ஆகியோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது, ‘தென்காசி நகராட்சி 10வது வார்டு தனி வார்டாக இருந்தது. இந்த வார்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமியர் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். தற்போது வார்டு மறு சீரமைப்பு செய்ததில் 10வது வார்டாக இருந்த எங்கள் பகுதியை 9வது வார்டாக மாற்றியுள்ளனர். தனி வார்டாக இருந்ததை பெண்கள் பொது வார்டாக மாற்றியுள்ளனர். இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. எனவே எங்கள் வாக்காளர்களை இரண்டாக பிரிக்காமல் இதற்கு முன் எப்படி ஒரே வார்டில் எங்கள் வாக்காளர்கள் இருந்தார்களோ அதே போல் மாற்றி அமைத்து 1800 வாக்காளர்களை  கொண்ட எங்களுக்கு வார்டு மறுசீரமைப்பில் உள்ள 9வது வார்டை எஸ்.சி.தனி வார்டாக அமைத்து தர வேண்டும்’. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Tags : anti-Tenkasi ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது