×

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் ராஜகோபுரம் அமைத்த உபயதாரருக்கு பாராட்டு

தென்காசி, ஜூன்18:  பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் மலைப்பாதை, தங்கத்தேர் மற்றும் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைத்து கொடுத்த உபயதாரர் அருணாச்சலத்தை பக்தர்கள் குழு சார்பில் பாராட்டி வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது. தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் 544 படிக்கட்டுகளை கொண்டது. இந்த படிகட்டுகளின் வழியாக ஏறி சென்றுதான் மலை மீது அமர்ந்துள்ள முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு இந்த மலைக்கோயிலுக்கு செல்ல தமிழக அரசு மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் தனது சொந்த நிதி மூலம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் முன்னாள் அறங்காவலர் அருணாச்சலம் மற்றும் அவரது துணைவியார் பரமேஸ்வரி அருணாச்சலம் ஆகிய உபயதாரர்கள் மூலம் புதிதாக தங்கத்தேரும் அமைக்கப்பட்டு தேர் தொடர்ந்து முக்கிய திருவிழா நாட்களில் இழுக்கப்பட்டு வருகிறது.  

மேலும் உபயதாரர்கள் அருணாச்சலம், பரமேஸ்வரி அருணாச்சலம் ஆகியோரின் மூலம் 5 நிலை கொண்ட 48.75 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த 14ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. வண்டாடும் பொட்டல் பகுதியிலிருந்து மலைக்கோயிலுக்கு சென்று வர இலவச வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திய உபயதாரர் அருணாச்சலம் மற்றும் துணைவியார் பரமேஸ்வரி அருணாச்சலம் ஆகியோரை பாராட்டி பக்தர்கள் குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் பக்தர்கள் குழு சார்பில் கடையநல்லூர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் உபயதாரர் அருணாசலத்திற்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கினார்.

Tags : temple ,Thirumalakumara Swamy Temple ,
× RELATED முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா...