பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பூந்தமல்லி, ஜூன் 18: பூந்தமல்லி நகராட்சி ஆணையர் டிட்டோ உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூந்தமல்லி டிரங்க் ரோடு, கரையான்சாவடி, குமணன்சாவடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள்ப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.அதே போல திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் தலைமையில் திருவேற்காடு, நூம்பல், வேலப்பன்சாவடி, புளியம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மக்காத குப்பை வகையில் சேர்க்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். தொடர்ந்து அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags :
× RELATED தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு