×

பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டம் விற்பனை காசு கொடுத்து நோய் வாங்கும் மாணவர்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவள்ளூர், ஜூன் 18: பள்ளிகளின் அருகே சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனையால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர் காசு, பணம் கொடுத்து அனுப்புவதும், பாட இடைவேளை நேரத்தில் கடைகளில் விற்கும் தின்பண்டங்களை வாங்கிச்சாப்பிடும் நடைமுறை காலங்காலமாக உள்ளது.அன்றைய காலங்களில் பள்ளிகளின் அருகே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், நாவல், ஆரஞ்சு, இலந்தைப் பழம், பனங்கிழக்கு, பணியாரம், கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு வகை சத்துக்கள் அடங்கிய பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்தனர்.இவற்றின் சுவையால் பள்ளி குழந்தைகள் பாடவேளை முடிந்ததும் மிட்டாய் மற்றும் பெட்டி கடைளை வலம் வருவார்கள். அன்று கடைகளில் விற்ற தின்பண்டங்கள் சத்தானதாகவும், சுகாதாரமானதாகவும் கிடைத்தது. ஆனால் இன்றைய நிலை அதற்கு நேர் எதிர்மாறாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் எதிரே சுகாதாரமற்ற வகையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு, விஷ பூச்சிகள் தின்பண்டங்கள் மீது உட்கார்கிறது. வியாபாரிகள் பொருட்களை மூடி வைப்பதும் கிடையாது.

இதனால் தின்பண்டங்கள் உண்ண ஏற்ற வகையில் இருப்பதில்லை. பாலிதீன் பைகளில் அடைத்து இனிப்பு பண்டங்களும், மிட்டாய்களும் ஏராளமாக விற்கப்படுகிறது. சில கடைகளில் காலாவதியான மிட்டாய், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இதுபோன்ற சுகாதாரமற்ற தின்பண்டங்களை மாணவர்கள் உண்பதால் வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். விலை கொடுத்து வியாதியை வாங்கும் அவல நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘’ மாணவர்கள் பணம் கொடுத்து சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு, நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆரம்பப்பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே செல்லக் கூடாது, பள்ளி அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்யக் கூடாது என அரசு கூறுகிறது.இதனை கல்வித்துறை, உணவுப்பொருள் பாதுகாப்பு துறையும் கண்டுகொள்வதில்லை. பொது சுகாதாரத்தை பராமரிக்கும் உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’’’ என்றனர்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...