×

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிப்பில் குளறுபடி

நெல்லை, ஜூன் 18: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி கடங்கனேரி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு விபரம் வருமாறு: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 14ல் பெரும்பாலும் கடங்கனேரி ஊராட்சி வாக்காளர்களை இடம் பெற்றிருந்தனர்.  எங்கள் கிராமத்து வாக்காளர்கள் அனைவரும் ஒன்றாக 14வது வார்டில் போட்டியிடுவோருக்கு வாக்கு செலுத்தி வந்தோம். எங்கள் கடங்கனேரி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது வார்டு வரையறை என்ற பெயரில் எங்கள் கிராமத்தில் ஒரு பகுதியினர், சுமார் 800 பேர் வார்டு எண் 11 காவலாக்குறிச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

ஒற்றுமையாக உள்ள எங்கள் கிராமத்தை உடைத்து ஒருபகுதியை கடங்கனேரி வார்டுக்கும், மறுபகுதியை காவலாக்குறிச்சி வார்டுக்கும் இணைப்பதன் மூலம் ஊரை பிளவுப்படுத்தும் முயற்சி நடக்கிறது. எங்கள் வார்டு ஒன்றிய கவுன்சிலரை நாங்கள் ஒற்றுமையுடன் தேர்வு செய்து, அவர் மூலம் எங்கள் ஊருக்கு தேவையான வசதிகளையும், உரிமைகளையும் நிலைநாட்டி வருகிறோம். இப்போது மறுவரையறை என்ற பெயரில் எங்கள் உரிமைகளை பறிக்க திட்டமிடுகின்றனர். எனவே மீண்டும் எங்கள் கடங்கனேரி பகுதியை முழுவதுமாக வார்டு எண் 14ல் வாக்களிக்கும் விதமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டியது வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Alangulam ,union wards ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி