×

புதிய கடைகள் கட்ட திட்டமா? சங்கரன்கோவிலில் ஊரணியை ஆக்கிரமித்து தடுப்பு சுவர்

சங்கரன்கோவில் ஜூன்18: சங்கரன்கோவிலில் வாணியர் ஊரணியை  ஆக்கிரமித்து தடுப்பு சுவர் அமைத்து கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். சங்கரன்கோவில் நகராட்சி முதல்நிலை நகராட்சியாகும். இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில்  22 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகத்தால்  கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
 மேலும் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் ஓத்துழைப்புடன் தனியார் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, நகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் பராமரிப்பின்றி மழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க கூட முடியாத அவல நிலையில்  உள்ளது.   சங்கரன்கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க மறந்து போன நகராட்சி நிர்வாகம் நகரில் பேருந்துநிலையம், திருவேங்கடம் சாலை, பேருந்துநிலையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் அருகில், கழுகுமலை சாலையில் பொதுமக்கள் நடைபாதையாக இருந்த இடம் ஆகியவற்றில் திடீரென கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவேங்கடம் சாலையில் உள்ள வாணியர் ஊரணியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாத வண்ணம் நகராட்சி சார்பில் ஊரணியின் தெற்கு பகுதியில் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.  கடந்த வாரம் முள்வேலி அமைக்கபட்டிருந்த பகுதியில் 5 அடிக்கு மேல் ஆக்கிரமித்து ஊரணிக்குள் நகராட்சி நிர்வாகம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டும் பணி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பு சுவரை உள்ளே தள்ளி ஆக்கிரமித்து அமைத்துவிட்டு தெற்கு பகுதியில் கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. ஏற்கனவே சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாசல் பகுதிக்கு எதிரே நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்ட முயற்சி செய்தபோது அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள வாணியர் ஊரணியை ஆக்கிரமித்து கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதை கைவிட்டு நீர் நிலைகளை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சங்கரன்கோவில் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : stores ,township ,Sankarankovil ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்