×

சர்க்கரை ஆலையில் திருட்டு விவகாரம் அதிகாரிகளை விசாரிக்க நிர்வாகிகள் வலியுறுத்தல்

திருத்தணி ஜூன் 18: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்குகிறது. இந்த ஆலையில் அரக்கோணம், திருவள்ளுர், திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து ஆண்டு தோறும் கரும்புகளை அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் முறையாக ஆலை நிர்வாகத்திற்கு தேர்தல் முடிவுற்று ஏற்கனவே 2 கூட்டம் முடிந்த நிலையில், 3வது கூட்டம் நேற்று திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மேலாண்மை இயக்குநர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். தலைவர் டி.பொன்னுரங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்று பேசினார். இதில், கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில்,  இந்த சர்க்கரை ஆலையில் முக்கிய இயந்திர தளவாடங்கள் களவு போய் உள்ளது. தற்போது ₹10 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டார், விலை உயர்ந்த வால்வுகள் என பல வகையான இயந்திர சம்மந்தமான பொருட்கள் திருடுபோய் இருக்கிறது. இதற்கு நிர்வாக அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். உரிய இடத்தில் வைக்காமல் தேவையில்லாத இடத்தில் சிசிடி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன என இயக்குநர்கள் சரமாரியாக குற்றம்  சாட்டினர்.
மேலும், இயந்திரங்கள் திருடுபோன விஷயமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் சார்பாக தெரிவித்தாலும், இதன் முக்கிய காரணமான அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என இயக்குநர்கள் வலியுறுத்தியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் என்.கே.சத்தியமூர்த்தி, என்.சக்திவேல், என்.ஏ.குப்பன், ஜி.சரசா உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

Tags : Executives ,
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்