×

கடம்பத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளியின் அவலம் வகுப்பறை பற்றாக்குறையால் கலையரங்கில் படிக்கும் மாணவர்கள்: அனல் காற்றில் நெளிவதால் பெற்றோர் குமுறல்

திருவள்ளூர், ஜூன் 18: திருவள்ளூர் அருகே அரசு உயர்நிலை பள்ளியில் வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளி கலையரங்கில் அமர்ந்து அனல் காற்றில் கல்வி பயிலும் அவல நிலை உள்ளது.கடம்பத்தூர் அடுத்த வெண்மணம்புதூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது.  இந்த பள்ளி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, வெண்மணம்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 1 முதல் 10ம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியை தரம் உயர்த்தி இரண்டு ஆண்டுகளாகியும், புதிய கட்டிட வசதியோ கூடுதல் வகுப்பறை கட்டிட வசதிகளோ என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.  இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தரம் உயர்த்தி இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கேற்ப கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால்   மாணவர்களை உட்காரவைத்து பாடம் நடத்துவதில்  ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கின் ஒருபுறம் துணியை கட்டி மறைத்து, 6ம் வகுப்பு மாணவ, மாணவியர்களை தரையில் உட்காரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் குறைந்தது 100 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெப்பத்துடன் அனல் காற்று வீசிவரும் நிலையில், மாணவர்கள் தரையில் உட்கார முடியாமல் நெளிகின்றனர். மேலும், அனல் காற்றால் மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து சோர்வு ஏற்படும் அபாயமும் உள்ளது.இவ்வாறு மாணவர்கள் வெட்ட வெளியில் அமர்ந்து பாடம் படிப்பதை அந்த பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். எனவே ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Student students ,artroom ,
× RELATED 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு மாணவ-மாணவிகளுடன் ஆர்ப்பாட்டம்