×

திருவள்ளூரில் 110 டிகிரி வெயிலுடன் அனல் காற்று: வீட்டிற்குள் முடங்கிய மக்கள்.

திருவள்ளூர், ஜூன் 18: திருவள்ளூர் கடலோர மாவட்டமாக இருப்பதால் வெப்பம் பெரும்பாலும் அதிகரிப்பதில்லை. பிற்பகல் வேளையில் கடல்காற்று வீசுவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நீர் நிலைகள் முழுவதும் வறண்டு போயின. குடிநீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெயில் நாளுக்கு நாள் 107 முதல் 114 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. சித்திரை மாதம் கடைசி வாரமும், வைகாசி முதல் வாரமும் பொதுவாக வெப்பம் அதிகரிக்கும் காலங்களாகும்.இந்த ஆண்டு ஆனி மாதம் பிறந்தும் வெயில் குறைந்தபாடில்லை. காலையில் இருந்தே சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கடல் காற்றுக்கு பதிலாக மேற்கிலிருந்து அனல் காற்று வீசி வருவதால் பகல் பொழுதில் ஏற்பட்ட உஷ்ணம் குறையாமல் நீடிக்கிறது. கத்திரி வெயில் முடிந்து 20 நாட்கள் ஆகியும் திருவள்ளூரில் நேற்று 110 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. அதோடு  அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வீதிகளில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இன்றும், நாளையும் மேலும் அனல் காற்று அதிகரிக்கும் என வானிலை நிலவரம் தெரிவிக்கின்றது. அனல் பறக்கும் வெப்பத்தினால் மக்கள் வீட்டிற்குள்ளே தண்ணீரை ஊற்றியும், துணிகளை நனைத்து உடலில் போட்டுக்கொண்டும் வெப்பத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்மை நோய் பரவும் அபாயம்: மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ''தொடர்ந்து இரு தினங்களுக்கு தும்மல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் இருப்பதன் மூலம், அம்மை நோய் தாக்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். இதில், சின்னம்மையால் உடலில் கொப்பளங்கள் உருவாகும்.பொன்னுக்கு வீங்கியால் காதுக்கு பின் கட்டி போன்ற வீக்கமும், தட்டமையால் சிகப்பு நிற வேர்க்குரு போன்ற கொப்பளங்களும், மணல்வாரி அம்மை பாதிப்பால், உடலில் சிறிய அளவிலான கொப்பளங்களும் ஏற்படும். அமை்ை நோய்க்கான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Tags : house ,Tiruvallur ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...