×

அத்தி வரதர் வைபவம் ஏற்பாடுகள் தீவிரம் பக்தர்களிடம் விடுதிகள், ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம், ஜூன் 18: அத்தி வரதர் வைபவத்தில், பக்தர்களிடம், விடுதிகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து வெளியேறும் அத்தி வரதர் நிகழ்வை காணவரும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தருவது மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பொன்னையா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில், அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடைபெற உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் முன்னேற்பாடுகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முதன்மை செயலாளர் பணீந்தர ரெட்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.விழாவை முன்னிட்டு மேல் கோபுரம், ஆழ்வார் பிரகாரம் உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் கிழக்கு கோபுரம் பகுதியில் பந்தல் அமைக்கப்படும். கோயிலை சுற்றியுள்ள 6 டிரான்ஸ்பார்மர்கள் தரம் உயர்த்தும் பணிகள் மின்வாரியம் மூலம் நடக்கினன்றன.₹29 கோடியில் நகரின் முக்கிய சாலைகள், உள்சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில், வரதராஜபெருமாள் கோயில் குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு, அதில் உள்ள சேறும் அகற்றப்படும்.

செய்யாறு, வந்தவாசி மார்க்கமாக வரும் பஸ்கள் ஓரிக்கையிலும், அரக்கோணம், வேலூர் மார்க்கமாக வரும் பஸ்கள் ஒலிமுகமதுபேட்டையிலும், செங்கல்பட்டு மார்க்கமாக வரும் பஸ்கள் நசரத்பேட்டை பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்திலும் நிறுத்தப்படும்.ஓரிக்கை மற்றும் ஒலிமுமதுபேட்டை தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து தலா 10 பஸ்கள் இயக்கப்படும். ₹10 கட்டணத்தில், அந்த பஸ்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோயிலுக்கு செல்ல வழித்தட மேப் வைக்கப்படும்.நகரம் முழுவதும் 100 மீ. இடைவெளியில் சிசிடிவி கேமரா, கோயிலை சுற்றி 3 உயர் கோபுரங்கள், நகரம் முழுவதும் 12 உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும். வெளியூர்களில் இருந்து பட்டுச்சேலை எடுக்க வருபவர்கள், கடைக்கு வந்தபிறகு அவர்களின் வாகனங்களை ஒதுக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் நிறுத்த வேண்டும்.வெளியூர் பக்தர்கள் வருகையின்போது தங்கும் விடுதிகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தி வரதரை பக்தர்கள் காலை 6 மணிமுதல் பகல் 1 மணிவரையும், மாலை 3 மணிமுதல் இரவு 8 மணிவரையும் தரிசனம் செய்யலாம்.

இலவச தரிசனம், ₹ 50 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக தரிசனம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்ளூர் மக்கள் தரிசனத்திற்காக சிறப்பு நேரம் ஒதுக்க அதிகாரிகளுடன் பேசப்படுகிறது.மேலும் பள்ளிகள் காலையில் முன்னதாக தொடங்கி பிற்பகல் 2 மணிவரை நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சப் கலெக்டடம் உரிய அனுமதி பெற்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செய்யவேண்டும்.300க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவுத்தரம் குறித்து ஆய்வு நடத்துகிறார்கள். இந்த விழாவில் பாதுகாப்புப் பணிக்காக 2119 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த முறை நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக தகவல் உள்ளது. அதுபோன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ₹1 லட்சத்துக்கும் மேல் நன்கொடை வழங்குபவர்களுக்கு தனி அனுமதி சீட்டு வழங்கப்படும். நகரில் தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags : pilgrims ,hotels ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...