×

கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு மொபட் மீது மாநகர பஸ் மோதி தாய் பலி: மகள் படுகாயம்

கூடுவாஞ்சேரி, ஜூன் 18: மொபட் மாநகர பஸ் மோதியதில், தாய் பலியானார். மகளுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களால் விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கூடுவாஞ்சேரி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஆழ்வார் (55). இவரது மனைவி விஜயராணி (48). இவர்களது மகள் பார்கவி (24). ஆழ்வார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயராணியும், மகள் பார்கவியும் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் எதிரே வந்தபோது, போட்டி போட்டு வேகமாக சென்ற ஷேர் ஆட்டோக்கள், பயணிகளை ஏற்றுவதற்காக திடீரென நடுரோட்டில் நின்றன.இதனால் விஜயராணி, ஷேர் ஆட்டோக்கள் மீது மோதாமல் இருக்க மொபட்டை  திருப்பினார். அப்போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மாநகர பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதனால், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர்மீது, அதே பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் விஜயராணி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். பார்கவி படுகாயமடைந்தார்.

தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த பார்கவியை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், விஜயராணி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பஸ் டிரைவரிடம் விசாரிக்கின்றார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...