சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ₹1.5 கோடி அரசு நிலம் மீட்பு: கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன

செங்கல்பட்டு, ஜூன் 18: சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை,  செட்டி புண்ணியம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிய 15 கடைகள்,  பொக்லைன் இயந்திரத்தால் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி ₹1.5 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலை செட்டிபுண்ணியம் பகுதியில் சாலையை  ஒட்டி 15 கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பொதுப் பாதையை மறித்து  கட்டப்பட்ட கடைகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த  கடைகளை  அகற்றவேண்டும் என பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.அதன்பேரில், செங்கல்பட்டு தாசில்தார் சங்கர், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துவடிவேல்,  செட்டிப்புன்னியம் ஊராட்சி செயலாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, விஏஓ செந்தில்குமார் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, சாலையை ஒட்டியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் கடை நடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன்  இயந்திரம்  மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்து தரை மட்டமாக்கினர்.இதற்கிடையில், அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மறைமலைநகர்,   கூடுவாஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் சுமார் ₹1.5 கோடி மதிப்புள்ள 13 சென்ட் அரசு நிலம்  மீட்கப்பட்டது.ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டதால், சாலை போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.

Tags : Buildings ,Chennai - Tiruchirapalli National Highway ,
× RELATED விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதால் ஊட்டியில் 37 கட்டிடங்களுக்கு சீல்