×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு 15 நாட்களாகியும் வராத புத்தகங்கள் : மாணவ, மாணவிகள் கடும் அவதி

திருப்போரூர், ஜூன் 18: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு 15 நாட்களாகியும், இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. பள்ளி திறந்த அன்றே அனைத்து பாடப் புத்தகங்களும் வழங்கப்படும் என அரசும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் அறிவித்தனர். ஆனால், பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்களே சப்ளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் சுமார் 126 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 1 முதல் 5 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு இதுவரை எந்த புத்தகமும் வழங்கவில்லை. 4ம் வகுப்புக்கு 1 தொகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு 15 நாட்களாகி பாடங்களை நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இதுவரை புத்தகங்களே வழங்கப் படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள உயர்வு, பள்ளிகள் மூடலை தடுத்தல், பள்ளி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குவதாக தகவல்களை தெரிவிப்பதில் காட்டிய ஆர்வத்தை, பள்ளி திறந்த பின்னரும் புத்தகம் வழங்குவதில் அரசு அக்கறை காட்டவில்லை என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டுப் புத்தகங்களும் இதுவரை வழங்கவில்லை. 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு 40 பக்க நோட்டு ஒன்று மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பாடப்பிரிவுகளுக்கான நோட்டுப் புத்தகங்கள் இதுவரை வழங்கவில்லை. கட்டுரை நோட்டுகளும் வழங்கப்படவில்லை.அதேபோல் சீருடையில் இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இலவச சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு காலணிகள், அடையாள அட்டை போன்றவையும் ஏற்கனவே அறிவித்தது போல் குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Tags : government schools ,Kancheepuram district ,
× RELATED தையூர், இரும்பேடு அரசு பள்ளிகள் சென்டம்