×

மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள் குத்தகை விடப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை, ஜூன் 18: சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாநகரை சேர்ந்த கோமளா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 212 விளையாட்டு மைதானங்கள், 36 நவீன உடற்பயிற்சி மையங்கள், ஒரு உள்விளையாட்டு அரங்கம், 3 நீச்சல் குளங்கள், 8 டென்னிஸ் மைதானங்கள், 11 ஸ்கேட்டிங் தளங்கள் ஆகியவை உள்ளன.இந்த மைதானங்களை இலவசமாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். தமிழ்நாடு பூங்கா, விளையாட்டு மைதானங்கள் திறந்தவெளி இடங்கள் (தடுப்பு ற்றும் ஒழுங்குப்படுத்தும்) சட்டத்தின்படி, விளையாட்டு மைதானங்களை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பராமரிக்க வேண்டும்.  இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஒரு முடிவை சமீபத்தில் எடுத்தது. அதன்படி மேற்கண்ட விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஸ்கேட்டிங் தளங்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் தனியாருக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மைதானங்களை மாநகராட்சியே பராமரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில் வக்கீல் கே.சவுந்தரராஜன் ஆஜராகி, தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், விளையாட்டு மைதானங்களை குத்தகைக்கு விட ‘டெண்டர்’ கோரியது. அதாவது 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். குத்தகை தொகை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரிக்கப்படும்.  இந்த அடிப்படையில் ஷெனாய்நகர், அயனாவரம், மந்தைவெளி, ஜாபர்கான்பேட்டை, இந்திராநகர் உள்பட 11 இடங்களில் உள்ள 19 பூப்பந்து திடல்களை நிர்வகிப்பது மற்றும் பராமரித்து மேம்படுத்தும் ஒப்பந்தம் தனியாருக்கு  வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  இருதரப்பு வாதங்களையும்  கேட்டறிந்த நீதிபதிகள், “உள்ளாட்சி அமைப்புகளின் விளையாட்டு மைதானங்களை தனியார் மூலம் மேம்படுத்தவும், பராமரிக்கவும் சட்டத்தில் தடை விதிக்கவில்லை.  மேலும், ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்புகளையோ, உத்தரவுகளையோ எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Tags : City Hall ,playgrounds ,
× RELATED ரஷ்யாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை