பணம் பறிக்கும் நோக்கில் அலைக்கழிப்பு அரசு பள்ளியில் மகனை சேர்த்து படிக்க விடாமல்

முட்டுக்கட்டை : தனியார் பள்ளி மீது தந்தை புகார்
அண்ணாநகர், ஜூன் 18: சென்னை அரும்பாக்கம் பெருமாள் கோயில் 2வது தெருவை சேர்ந்தவர்  செல்வம் (43). தள்ளுவண்டியில் தையல் இயந்திரத்தை வைத்து, தெருத் தெருவாக சென்று துணிகள் தைத்து கொடுத்து, பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார்.  அதில் கூறியிருப்பதாவது: எனது மகன் நிவாஸ் (14), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தான். அவனுக்கு கட்டணமாக  முதல் தவணையாக ₹10,000 செலுத்தினேன். ஆனால், பள்ளி நிர்வாகம் புத்தக கட்டணம், தேர்வு கட்டணம், நூலக கட்டணம் என்று தொடர்ந்து பணம் கட்டும்படி என்னிடம் வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் என்னால் தொடர்ந்து கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். இதனால், அதிக கட்டணம் செலுத்தி எனது மகனை தனியார் பள்ளியில் படிக்க முடியாது என்பதை உணர்ந்து, அவனை அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தேன். பின்னர், எனது மகன் படித்த பள்ளிக்கு சென்று, அவனின் மாற்றுச் சான்றிதழை வழங்கும்படி கேட்டேன். ஆனால், தலைமை ஆசிரியர் சாரதி, உனது மகன் இதுவரை இங்கு படித்ததற்கு கல்வி கட்டணமாக ₹18 ஆயிரம் செலுத்தினால் தான் மாற்றுச் சான்றிதழ் தரப்படும், என்று கராராக கூறிவிட்டனர்.

இதனால், மனமுடைந்த நான், எனது மகன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, வட்டிக்கு கடன் வாங்கி மொத்த தொகையையும் கட்டினேன். ஆனாலும், அவனது மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலர்கள், என்னை தகாத வார்த்தையால் பேசி அழைக்கழித்து வருகின்றனர்.  என்னுடைய மகனை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறேன். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகம் அதை தடுக்கிறது. மேலும் பணம் பறிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது. எனவே, எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள்.இவ்வாறு தெரிவித்து இருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட அரும்பாக்கம் போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags : government school ,
× RELATED தரங்கம்பாடி அருகே தாய் திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை