×

செங்கம் அருகே வாடகை கட்டிடத்துக்கு உரிமையாளர் பூட்டு விவசாயி வழங்கிய இடத்தில் அரசு பள்ளி கலெக்டர் அதிரடி உத்தரவு

செங்கம், ஜூன் 18: செங்கம் அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கிய அரசு பள்ளிக்கு உரிமையாளர் பூட்டு போட்டார். இதனால் அருகில் விவசாயி வழங்கிய இடத்தில் அரசு பள்ளி தற்காலிகமாக இயங்க கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மணிக்கல் மாந்தோப்பு கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 17 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக இந்த வீட்டிற்கு வாடகை மற்றும் மின்கட்டணத்தை அதிகாரிகள் வழங்கவில்லை.

இதையடுத்து அவர் பள்ளியை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு சென்றார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த உதவி ஆசிரியர் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். பள்ளி திடீரென பூட்டப்பட்டதால் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டனர். இதையறிந்த, அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர், தனது வீட்டின் முன்புறம் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். இதையறிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, கடந்த 15ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையைில், செங்கம் ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் கல்வி மாவட்ட அலுவலர்கள் நேரில் சென்று புதிய பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யவும், தற்காலிகமாக விவசாயி வழங்கிய இடத்திலேயே மாணவர்கள் பயிலவும், மதிய உணவு வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ் கந்தசாமி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டர். அதன்பேரில், நேற்று விவசாயி தனக்கு சொந்தமான இடமான மணிக்கல் மாந்தோப்பில் உள்ள இடத்தில் பாடம் நடத்தவும், மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து புதிய வகுப்பறை கட்டி பள்ளி இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : government school collector ,owner ,building ,Sengam ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...