×

தண்டரம்பட்டு பகுதியில் ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை

தண்டராம்பட்டு, ஜூன் 18: தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி, சாத்தனூர், வாணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அன்றாட பணிக்காக ஆயிரக்கணக்கானோர், தண்டராம்பட்டில் உள்ள தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

தண்டராம்பட்டு பகுதியில் பெரும்பாலான கடைகளில் காலாவதியான கூல்டிரிங்ஸ், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஓட்டல்களிலும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, மாவட்ட உணவு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான அல்லது தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : area ,Dandarbatta ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...