பயறு வகையில் அதிக மகசூல் எடுக்கலாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை

சாத்தூர், ஜூன் 14: சாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயறுவகையில் அதிக மகசூல் எடுக்க சாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆலோசனை வழங்கினார். அதில் அவர் கூறுகையில், பயறுவகைப் பயிர்களில் அதிக பூக்கள் உருவாகி அதிக காய்கள் பிடிக்கும் வகையில் 2 சதவீத டை அமோனியம் பாஸ்பேட் கரைசலை இரண்டு முறை தெளிக்க வேண்டும் என்றார்.

கரைசலை தயார் செய்யும் முறை: அமோனியம் பாஸ்பேட் கரைசலை தயார் செய்திட 11 கிலோ டை அமோனியம் பாஸ்பேட் உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் பிளாஸ்டிக் பக்கெட்டில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு வடிகட்டி கரைசலை 490 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 2 சதவீத கரைசல் தயாராகிவிடும். பயறுகளில் தெளிக்கும் முறை:

இந்த கரைசலை  கைத்தெளிப்பான் கொண்டு மாலை நேரத்தில் சூரிய ஒளியின் வெப்பத் தாக்கம் குறைவாக இருக்கும் தருணங்களில் தெளிக்க வேண்டும். பகல் நேரங்களில் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் தருணத்தில் கண்டிப்பாக இக்கரைலைத் தெளிக்கக் கூடாது. அதேபோல் இக்கரைலை தெளிப்பதற்கு விசைத் தெளிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.

முதல் முறை தெளித்த 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல் கரைசலை தயார் செய்து மேற்கூறியவாறு தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் அதிக பூக்கள் உருவாகி காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும். பூத்த பூக்கள் கொட்டாமல் இருக்க முதல் பூ உருவாகும் தருணம் மற்றும் அதற்கடுத்த 15 நாட்கள் கழித்து என இரண்டு தருணங்களில் 40 பி.பி.எம் நாப்தாலின் அசிடிக் அமிலத்தை தெளிக்க வேண்டும் என சாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

× RELATED விளைச்சல் சரிவால் பாகற்காய் விலை உயர்வு