×

ஓசியாக மண் எடுக்க அனுமதி வழங்கி விட்டு வசூல்வேட்டை விவசாயிகள் அதிர்ச்சி

உத்தமபாளையம், ஜூன் 14: உத்தமபாளையம் தாலுகாவில் கண்மாய்களில் விவசாயிகளுக்கு இலவசமாக மண் எடுக்க அனுமதி கொடுத்துவிட்டு இதற்கான பாஸ் வழங்கிட பொதுப்பணித்துறை அலுவலத்தில் பணம் வசூலிக்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகாவில் சின்னமனூர், கம்பம், கூடலூர், ஆனைமலையன்பட்டி, ஓடைப்பட்டி, மார்க்கையன்கோட்டை, தேவாரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள், குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கடந்த 15 நாட்களாக தரப்படுகிறது. இதற்காக உள்ளூர் விஏஓ, ஆர்.ஐ, ஆகியோரிடம் பரிந்துரை வாங்கி உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் தரவேண்டும். தாசில்தார் விசாரணைக்கு பின்பு உத்தரவு நகல் வழங்கப்படுகிறது. இதனை எடுத்து கொண்டு உத்தமபாளையத்தில் செயல்படும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட உதவிபொறியாளரின் அனுமதி பெறவேண்டும்.

இந்த அலுவலகத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படும். இதனை பெற்ற பின்பே குளங்கள், கண்மாய்களில் சென்று மண் அள்ள முடியும். விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற உத்தரவு நகலில் குறிப்பிடப்படும். இதன்பின்பு பொதுப்பணித்துறை அனுமதி சீட்டை பெற்று டிராக்டர்களில் மண் அள்ளிக்கொண்டு செல்லவேண்டும். இடையில் அதிகாரிகள் யாராவது செக்கிங் செய்தால் இந்த அனுமதி சீட்டை காட்ட வேண்டும். ஆனால் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றால் நடை சீட்டு (அனுமதிபாஸ்) வாங்குவதற்கு விவசாயிகளிடம் ரூ.3ஆயிரம் முதல் 5ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவே இந்த வசூல் வேட்டை நடப்பதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் உரிய பதிலளிக்க மறுப்பதாக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மறுபுறம் கரம்பை மண் அள்ளி கடத்தல் தொழிலை நடத்தும் வியாபாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுமதி பாஸ் வாங்கி செல்கின்றனர்.

இவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். அனுமதி சீட்டு வழங்கிட பொதுப்பணித்துறை எதற்காக பணம் வசூல் செய்கின்றனர் என்பதை தேனி மாவட்ட கலெக்டர் விசாரணை செய்யவேண்டும். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், ``பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்களில் விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி கொடுத்துவிட்டு இதன் அனுமதி பாஸ் வாங்க வசூல் செய்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தவேண்டும்’’ என்றனர்.

Tags : grocery store ,
× RELATED வாடிக்கையாளர்களை பார்த்து...