×

தேவாரத்தில் பளியர்கள் மூலம் மக்னாவை விரட்ட வனத்துறை முடிவு

தேவாரம், ஜூன் 14: தேவாரத்தில் மக்னா யானையால் உயிர்பலிகள் அதிகரித்து வரும் அதை விரட்ட பொள்ளாச்சியில் இருந்து பளியர்களை வரவழைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. தேவாரம் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி உள்ள ஒற்றை மக்னா யானை ஆண்டிற்கு ஒருமுறை உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கி உள்ளது. எனவே, யானையை கும்கி துணை கொண்டு பிடித்து பொள்ளாச்சிக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் பல ஆண்டுகளாக மக்னா தாக்குதலில் பலர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அய்யாவு என்பவரை அடித்து கொன்றது. இதையடுத்து தோட்டங்கள், விளைநிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை இறங்குவதை தடுத்திட வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து பளியர்கள் 5 பேர் வர உள்ளனர். இவர்களுடன் உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் இணைந்து தினந்தோறும் இரவு நேரத்தில் யானை இறங்ககூடிய இடமாக உள்ள சாக்குலூத்து, பதினெட்டாம்படி, பெரம்புவெட்டி உள்ளிட்ட இடங்களில் இதனை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் 1 மாதம் வரை தங்கி இருப்பார்கள். காடுகளில் வனவிலங்குகளுடன் நன்கு பழககூடிய இவர்கள், தற்போது பொள்ளாச்சியில் வனத்துறையில் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு கும்கி யானைகள் இங்கு வந்தபோது இவர்களும் இங்கு வந்தனர். இது தற்காலிக நடவடிக்கைதான் என்றாலும், நிரந்தரமாக இதனை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்கவேண்டும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` மக்னா யானையை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் சில நாட்களுக்கு வனப்பகுதிகளில் நிற்கும். இதன்பின்பு மீண்டும் நிலங்களுக்கு வந்து அட்டகாசம் செய்யும். எனவே இதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Forest Department ,springs ,Magna ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...