நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க வவ்வால்கள் கடித்த பழத்தை சாப்பிட கூடாது மலேரிய தடுப்பு அலுவலர் அட்வைஸ்

ராமநாதபுரம், ஜூன் 14:  நிபா வைரஸ் காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. கேரளத்தில் ஏராளமானவர்கள் நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் வவ்வால் மூலமாக பரவுவதாக கூறப்படும் நிலையில், வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம்
என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் தொழில் ரீதியாகவும், கோயில் வழிபாட்டுக்காகவும் கேரளா சென்று வருகின்றனர். மலை பிரதேசமான  கேரளாவிலிருந்து ஏராளமான பழங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவிற்கு சென்று வருபவர்கள், அங்கிருந்து விற்பனைக்கு வரும் பழங்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து கேரளா சென்று வந்த சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் நிபா வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுப் பகுதி மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் இருகிறது. அந்த பகுதியில் கடிந்த நிலையில் பழங்கள் ஏதும் கீழே கிடந்தால் அதை எடுத்து உண்ண கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மலேரிய தடுப்பு அலுவலர் உதயகுமார் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களை கண்காணித்து வருகிறோம்.

ராமநாதபுரம் நகரில் மட்டும் 2 சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுவினர் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று காய்ச்சல் பாதித்தவர்களை கணக்கெடுத்து அவர்கள் வீட்டுக்கே சென்று விசாரித்து அறிக்கை தயாரித்தும் வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு மருத்துவ மனைகளிலும் தினமும் 5 பேர் காய்ச்சல் உள்ளது என சிகிச்சைக்காக வருகின்றனர். அனைவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் உள்ளதா என முறையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் கொய்யா பழம், மாம்பழம், மற்றும் நாவல் பழங்கள் அதிளவில்  விற்கப்படுகின்றன. அவை கேரள மாநிலத்திலிருந்து வந்தவைகளா என  சுகாதாரத்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கொய்யா, மா உள்ளிட்ட இனிப்பு ருசி கொண்ட பழங்களை வவ்வால் கடித்த நிலையில் இருந்தால் சாப்பிட வேண்டாம். இது போன்ற பழங்களையும் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நிபா வைரஸ் பாதிப்பு நமது மாவட்டத்தில் இல்லை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவ்வால்கள் கடித்த பழங்களை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என்றும், மரங்களின் கீழே கிடக்கும் மற்றும் கடித்த நிலையில் உள்ள பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

Tags :
× RELATED காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த...