×

ஊட்டி - மஞ்சூர் சாலையில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி, ஜூன் 14: ஊட்டி - மஞ்சூர் சாலையில் மிகவும் அபாயகரமான காந்திப்பேட்டை சரிவில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி துவக்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ெபரும்பாலான சாைலகள் மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலைகள் அதிக வளைவுகளையும், குறுகியும் காணப்படும். இதனால், இச்சாலையில் மிகவும் கவனமாக வாகனங்கள் இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில், மசினகுடி சாலை, ஊட்டி - குன்னூர் சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலைகளில் உள்ள பள்ளதாக்குகளில் ஏற்பட்ட  விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட இடங்கள் அனைத்துமே மலை சரிவுகள் மட்டுமின்றி, பெரிய பள்ளதாக்குகள். இதனால், உயிரிழிப்புகளும் அதிகரித்தன. பெரும்பாலான சாலைகளில் பள்ளதாக்குகள் உள்ள இடங்கள், சரிவுகளில் அமைக்கப்பட்ட சாலைகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட பின்னரே அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்து நிறைந்த சாலைகளில் தடுப்புகள் அமைப்பதில்லை.  குறிப்பாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் மிகவும் ஆபத்தான சாலை கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியாகும். இப்பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. சாலையோரங்களில் தடுப்புகளே கிடையாது. எதிர்பாரதவிதமாக வாகனங்கள் விபத்திற்குள்ளானால், சுமார் 1000 அடி பள்ளத்தாக்கிலேயே சென்று விழும். எனவே, இச்சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அல்லது கான்கிரீட் தடுப்புகள் அமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினரை வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளது. எனினும், மிகவும் ஆபத்தான கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியில் பணிகளை துவக்காமல் உள்ளது. இப்பகுதியில் உடனடியாக தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மற்ற இடங்களை காட்டிலும் உயரமாகவும், இரு அடுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,Manjur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி