×

தமிழ்நாடு சிறப்பு படை காவலர்களுக்கு கோவையில் ரூ.10.88 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ஜூன்14: தமிழ்நாடு சிறப்பு படை காவலர்களுக்கு கோவையில் ரூ.10.88 கோடி செலவில் 137 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.  கோவைபுதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்காக 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சி மூலம் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட கலெக்டர் ராசாமணி, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது: தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். வாகன போக்குவரத்தினை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகள், உயர்மட்ட பாலங்கள் என அனைத்து திட்டங்களும் கோவையில் வருகிறது. கிராமம்,  நகர்புற பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தேவை தொடர்பாக முன் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் அனைத்து பகுதி மக்களுக்கும் தங்கு தடையில்லா குடிநீர் வினியோகம் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மாநிலத்தின் அமைதியை பேணி பாதுகாப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்று கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை செயல்படுத்தி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளும் காவலர்களின் வசதிகளை மேம்படுத்திடும் வகையில் புதிய காவல்நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி தமிழக முதல்வரால் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணியில் பணிபுரியும் காவலர்கள், குடும்பத்துடன் வசிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 137 புதிய அடுக்கு மாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : apartment ,Coimbatore ,special forces guards ,Tamil Nadu ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...