×

ஜமாபந்தி அலுவலர் வராததால் தாசில்தாரிடம் மனுக்கொடுத்த மக்கள்

நத்தம், ஜூன் 14: நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று முன் தினம் 12ம் தேதியன்று ஜமாபந்தி தொடங்கி, நேற்றும், இன்றும் ஆகிய மூன்று நாட்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே முன்னதாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நத்தத்தில் ஜமாபந்தி அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 12ம் தேதியன்று முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி, சாத்தம்பாடி, லிங்கவாடி, புதூர், ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களுக்கு நடந்தது.

முதல்நாளான அன்று ஜமாபந்தி காலை 10 மணிக்கு தொடங்கியது. அன்று ஜமாபந்தி அலுவலர் ராமு காலை சுமார் 11.30 மணிக்கு தாமதமாக வந்தார். அதுவரை அவருடைய வருகைக்காக தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் மனுக்களுடன் காத்திருந்தனர். பின்னர் 12 மணியளவில் கிராம மக்களிடம் மனுக்களை வாங்கினார்.
2ம் நாளான நேற்று ஜமாபந்தி அலுவலர் ராமு வழக்கம்போல் சுமார் 12 மணி வரை வரவில்லை.

இதனால் காத்திருந்த கிராம மக்கள் தாசில்தாரிடம் இதுபற்றி கேட்டனர். வந்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் வர தாமதமாகவே அவருடைய பிரதிநிதியாக ஒரு தாசில்தார் வந்ததாகக்கூறினர். இதை தொடர்ந்து கிராமத்தினரிடம் நத்தம் தாசில்தாரே மனுக்களை பெற்றார். இதனால் தீர்வு தாமதமின்றி முறையாக கிடைக்குமா? என்ற சந்தேகத்துடன் மனுக்களை கொடுத்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் ஜமாபந்தியை பேருக்கு நடத்தி ஆவணங்களை சரி செய்கிறதா? என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் அதன் மீது நம்பிக்கையிழந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுந்தராசன் என்பவர் கூறுகையில், ‘ஜமாபந்தியில் மனுக்கள் கொடுத்து தீர்வு பெற வந்தால் ஜமாபந்திக்கான அலுவலராக மாவட்ட நிர்வாகம் சார்பில் சப்-கலெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தலைமை வகித்து மனுக்களை பெறுவர். இதுகுறித்து நத்தம் தாசில்தார், தாலுகா அலுவலக அலுவலர்களிடம் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி, அவற்றிற்கு மனுதாரர் தகுதியுடையவராகவும், ஆவணங்கள் சரியாகவும் இருக்கும்பட்சத்தில் அந்த ஜமாபந்தி அலுவலரால் உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு தீர்வுகளை கிராம மக்கள் பெற்று வந்தனர்.

இதனால் சரியாக காலத்தை கடைபிடித்து மாவட்ட அலுவலர் என்பதற்கான அந்தஸ்தையும் அவர்கள் பெற்று வந்தனர். இப்போது சாதாரணமாக பேருக்கு நடத்துவதுபோல் காலத்தையும் கடைபிடிக்காமல், முறையாக மனுக்களை சம்மந்தப்பட்ட ஜமாபந்திக்கு பொறுப்பான அலுவலர் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் நடத்துவது என்பது ஏனோதானோ என்ற வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை என்பது குறையும் வகையிலும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஜமாபந்தியை காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருவது போன்று சிறப்பு மிக்க வகையில் நடத்திட வேண்டும்’ என்றார்.

ஜமாபந்தி என்பது என்ன?
ஜமாபந்தி என்பது ஆண்டுக்கு ஒரு தடவை அந்தந்த கிராமங்களுக்கான வருவாய் சம்மந்தப்பட்ட கணக்கு, ஆவணங்கள் போன்றவற்றின் வருவாய் தீர்வாய நடைமுறைகளை உள்ளடக்கியது ஆகும். இதற்கு அலுவலராக மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சிதலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அதிகாரிகள் தலைமை தாங்கி நடத்துவர்.

இதுபற்றி அந்தந்த மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக விபரங்கள் வெளியிடப்படும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதில் நடைபெறும் தாலுகா, இடம், நாள், நேரம், ஜமாபந்தி அலுவலர் குறித்த விபரங்கள் இருக்கும். இதன் மூலம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் அந்தந்த கிராம மக்களை சென்றடையும். இதில் கிராம மக்கள் தங்கள் நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்களான பட்டா, பெயர் மாற்றம், போன்றவைகளுக்கு உரிய ஆவணங்களுடன் மனுவாக ஜமாபந்திக்கு தலைமை தாங்கும் அலுவலரிடம் கொடுப்பர்.

அவர் அதுபற்றிய விவரங்கள், ஆவணங்கள் பற்றி கேட்டறிந்து அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு தீர்வு வழங்கும் முகமாக உத்தரவு வழங்குவார். அதை அந்த தாலுகா அலுவலக அதிகாரிகள் நடைமுறை படுத்தி ஆவணங்களை பதிவு செய்வர். இதனால் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த தாலுகாவில், அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகள் அவர்கள் பராமரிக்கும் ஆவணங்களை நேரடியாக ஜமாபந்தி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து ஆவணங்களின் அடிப்படையில் தீர்வுக்கான உத்தரவு வழங்குவர்.

இது காலம் காலமாக தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருவதாகும். மேலும் நிலவரி சம்மந்தப்பட்ட வருவாய் பசலி ஆண்டுக்கான வரிவசூல் முறைகளையும் பார்வையிட்டு மேற்பார்வை செய்து தணிக்கை செய்யும் நடைமுறையும் இருந்து வருகிறது.

முதல் நாள் 12ம் தேதி நிகழ்ச்சியும், காட்சியும்:
நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கிய ஜமாபந்திக்கு தலைமை தாங்க வேண்டிய அலுவலர் திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமு காலை 10 மணிக்கு தொடங்கிய ஜமாபந்திக்கு 11.30 மணிக்கு தாமதமாக வந்தார்.
அவரை தாசில்தார் ஜான்பாஸ்டின் டல்லஸ், ரெட்டியபட்டி வருவாய் ஆய்வாளர் வேங்கைமாறன், தலைமை நிள அளவர் ஜீவன், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வ்ருவாய்த்துறையினர் வரவேற்றனர்.

தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஜமாபந்தி அலுவலர் ராமு, தாசில்தார் ஜான்பாஸ்டின் டல்லஸ் ஆகியோருக்கு மரியாதை செலுத்தி தலையில் பாகை சூடி(பரிவட்டம் அணிவித்து) மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இவை அனைத்தும் முடித்துவிட்டு ஜமாபந்தி மனுக்கள் 12 மணிக்கு பெறப்பட்டன. இதனால் ஜமாபந்தியில் மனுவுடன் காலை முதலே வந்த கிராம மக்கள் காக்க வைக்கப்பட்டனர்.

2ம் நாளான நேற்று காலையில் சிரங்காட்டுப்பட்டி, சேத்தூர், சிறுகுடி, கோட்டையூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, செந்துரை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. ஆனால் ஜமாபந்தி அலுவலர் மதியம் 12 மணிவரை வரவில்லை. இதனால் இங்கு மனுக்களை கிராம மக்கள் கொடுக்க முடியாமல் காத்திருந்தனர்.

இது பற்றி தாசில்தார் ஜான்பாஸ்டின் டல்லஸிடம் கேட்டபோது திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் கான்பரன்சிங் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் ஜமாபந்தி அலுவலர் கலந்து கொண்டுள்ளதால் வரவில்லை. விரைவில் வந்துவிடுவார். அவருக்கு பதிலாக ஒரு தாசில்தாரை அனுப்பியுள்ளனர். எனவே கிராம மக்களிடம் நாங்களே மனுக்களை பெற்று வருகிறோம்’ என்றனர்.

Tags : Tashilda ,Officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...